திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (12:04 IST)

"விமர்சிப்பவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்" - உதயநிதி ஸ்டாலின்.!!

udayanithi
விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் எனது பணிகள் மற்றும் செயல்பாடுகள் இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 
துணை முதல்வராக இன்று பதவியேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை முதல்வர் பொறுப்பு கொடுத்த முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
 
மக்களுக்காக இன்னும் அதிகமாக உழைக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள் என்றும் இது பதவி கிடையாது, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு என்றும் உதயநிதி தெரிவித்தார். நேற்று இரவில் இருந்தே நிறைய பேர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
 
நிறைய விமர்சனங்கள் வருகிறது என்றும் விமர்சிப்பவர்களுக்கும் நன்றி என்றும் குறிப்பிட்ட உதயநிதி, அந்த விமர்சனங்களையும் நான் உள்வாங்கிக் கொண்டு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் எனது பணிகள், செயல்பாடுகள் இருக்கும் என்று தெரிவித்தார்.
 
ஏற்கனவே அமைச்சராகி இரண்டு வருடம் செயல்பட்டு வருகிறேன் என்றும் இது கூடுதல் பணிதான் என்றும் இருந்தாலும் முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் வழிகாட்டுதலின் படியும் ஒத்துழைப்போடும் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
விமர்சனங்களை வரவேற்கிறேன் என்றும் எனது செயல்பாடுகள் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.