1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (12:58 IST)

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு தடை வருமா? - விசாரணை தொடங்கியது

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தினகரன் தரப்பு தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


 

 
தினகரன் பக்கம் உள்ள 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை அடுத்து தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் உள்ள எடப்பாடி அரசு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்து விட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தை திட்டமிட்டுள்ளது. 
 
இந்நிலையில், சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்து தினகரனின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுகவும் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தது. எனவே, திமுகவின் வழக்கோடு, எம்.எல்.ஏக்கள் நீக்கம் பற்றிய வழக்கும் சேர்ந்து விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி அந்த வழக்கின் விசாரணை இன்று மதியம் 12 மணியளவில் தொடங்கியது.
 
அப்போது, சபாநாயகரின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது எனவும், தமிழக அரசில் ஊழல் மலிந்து விட்டதால் முதல்வருக்கு அளித்த ஆதரவை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றார்கள் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், எம்.எல்.ஏக்கள் வேறு கட்சிக்கு தாவவில்லை. எனவே, கட்சி தாவல் தடை சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடி வருகிறார்.
 
எனவே, இந்த வழக்கில் 3 விதமான தீர்ப்பு வெளியாயகலாம் எனத் தெரிகிறது. ஒன்று, சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என தீர்ப்பு வரலாம். அல்லது, சபாநாயகரின் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறலாம். அல்லது, நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுங்கள் என நீதிமன்றம் கூறலாம் என சட்ட வல்லுனர்கள் கருத்து கூறிவருகிறார்கள்.