1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (17:55 IST)

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சதி? - பீதி கிளப்பும் ஹெச்.ராஜா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின்னால் சதி இருக்க வாய்ப்பிருக்கிறது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வளையல் உள்ளிட்ட பெண்களின் அலங்கார பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
 
இந்த பகுதியில் உள்ள கடைகள் நேற்றிரவு மூடப்பட்டவுடன் திடீரென நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்த தகவல் அறிந்து உடனடியாக காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து நாசமாகிவிட்டதாகவும், அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

 
தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மாவட்ட கலெக்டர் வீரராகவன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீவிபத்து நடந்த பகுதியை பார்வையிட்டார். இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், மின்கசிவே இந்த தீவிபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜா “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரம் கால் மண்டபம் மேற்கூரை பாதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன. இது விபத்தா சதியா என கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை தேவை” என ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 
மற்றொரு பதிவில் “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு வாயில் பகுதியில் கோயில் கட்டிடம் 7000 சதுர அடி பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மீதி பகுதிகள் பற்றி ஆய்வு தேவை. இந்து அறமற்ற துறையின் அவலத்திற்கு எடுத்துக்காட்டு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.