வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜூலை 2024 (13:59 IST)

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு..! சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றம்..!!

Viayabasar
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.   
 
இந்த வழக்கில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இது தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த போது, இந்த வழக்கை எம்.பி., எல்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி எழில் வளவன் உத்தரவிட்டுள்ளார். 


மேலும், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.