புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 30 மே 2024 (12:15 IST)

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு.! சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ நீதிமன்றம் பரிந்துரை..!!

vijayabaskar
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
 
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி  வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீது சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், இந்த வழக்கை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்து, விசாரணையை வரும் ஜூன் 19-க்கு  ஒத்தி வைத்தது.