வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (20:37 IST)

கூடுதல் காப்புத்தொகை கேட்பதா? மின்வாரியத்திற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

மின் நுகர்வோர்களிடம் மின் காப்புத் தொகையை கூடுதலாக கேட்பதாக வெளிவந்திருக்கும் செய்தியை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்துடன் கூடுதல் காப்புத்தொகை செலுத்தும்படி மின்சார நுகர்வோரை தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டாயப்படுத்துவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அவர்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துவது சிறிதும் இரக்கமற்ற செயல் ஆகும்.
 
தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் மின் இணைப்பு பெற்றவர்கள் மின்சாரப் பயன்பாட்டுக்கான கட்டணத்தை இரு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் கண்டனத்தை நேரிலும், இணையம் வழியாகவும் செலுத்தச் சென்றவர்களில் பெரும்பான்மையான நுகர்வோருக்கு வழக்கமான மின்சாரக் கட்டணத்துடன் கூடுதல் காப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
கூடுதல் காப்புத்தொகையை மொத்தமாகவோ, 3 சம தவணைகளிலோ செலுத்த முன் வராத நுகர்வோரிடம் மின்சாரக் கட்டணத்தை அதிகாரிகள் பெற்றுக்கொள்ளவில்லை.
 
கூடுதல் காப்புக் கட்டணம் என்பது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் இயல்பான ஒன்று தான். மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும் நுகர்வோரிடம் மட்டும் இந்தக் காப்புக் கட்டணம் வசூலிக்கப்படும்.
 
அனைத்து நுகர்வோரும் மே மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான ஓராண்டில் பயன்படுத்திய மின் கட்டணத்தில் மாத சராசரி கணக்கிடப்பட்டு, 3 மாதங்களுக்கான தொகை புதிய காப்புத் தொகையாக கணக்கிடப்படும்.
 
ஏற்கெனவே அவர்கள் செலுத்தியிருந்த காப்புத் தொகையை விட புதிய காப்புத் தொகை குறைவாக இருந்தால், அவர்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்படாது. மாறாக, புதிய காப்புத்தொகை கூடுதலாக இருந்தால், கூடுதல் தொகை வசூலிக்கப்படும். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், கட்டணம் வசூலிக்கப்படும் காலம் தான் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கரோனா அச்சம் காரணமாகவும், முழு ஊரடங்கு காரணமாகவும் ஏழை மற்றும் நடுத்தர மக்களில் பலர் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.2,000 நிதியுதவியைத் தான் தங்களின் வாழ்வாதாரத்திற்கு பல குடும்பங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.
 
அதனால், இரு மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், கூடுதல் காப்புத்தொகை செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது நியாயமற்றதாகும்.
 
வழக்கமாக பொதுமக்கள் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துவது வேறு; கரோனா காலத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாது என்பதால் 24 மணி நேரமும் மின் விசிறி உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தியதால், மின்சாரப் பயன்பாடு அதிகரிப்பது வேறு.
 
அசாதாரணமான சூழலில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தை கணக்கிட்டு, அதன்படி, கூடுதல் காப்புத்தொகை செலுத்தும்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும்.
 
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், கூடுதல் காப்புத் தொகை செலுத்த வேண்டும் என்ற தகவலை மின்சார வாரியம் எந்த நுகர்வோருக்கும் தெரிவிக்கவில்லை. மாறாக, வழக்கமான மின்சாரக் கட்டணம் குறித்து மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதை செலுத்துவதற்காக சென்ற மக்களிடம் கட்டாயப்படுத்தி கூடுதல் காப்புத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது.
 
நிலைமையின் சூழல் கருதி கூடுதல் காப்புத் தொகை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக மின்சார வாரியம் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் தெரிவிக்கப்பட்டாலும் கூட, அது குறித்த பொது அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், கூடுதல் காப்புத்தொகை தொடர்ந்து வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன; இது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
 
தமிழ்நாட்டு மக்களின் இன்றைய சூழல் தமிழக ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும். வருவாய்க்கு வழியில்லாமல் வாடுபவர்களிடம் கூடுதல் காப்புத்தொகை வசூலிப்பது மக்கள் நல அரசுக்கு அழகல்ல. எனவே, கூடுதல் காப்புத்தொகை வசூலிப்பதை மின்சார வாரியம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
 
அலுவலக சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படும் போதிலும், தொடர்ந்து கூடுதல் காப்புத்தொகை வசூலிக்கப்படுவதால், அதை நிறுத்துவதற்கான பொது அறிவிப்பை மின்வாரியம் வெளியிட வேண்டும்".
 
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்