அரசு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி..! – அமைச்சர் அசத்தல் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் உள்ள பார்சல் பெட்டிகளை பொதுமக்களுக்கு வாடகைக்கு அளிக்கும் திட்டத்தை போக்குவரத்துத் துறை செயல்படுத்த உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசின் விரைவு பேருந்துகள் சேவை நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான விரைவு பேருந்துகள் செயல்படும் நிலையில் அவற்றில் உள்ள பார்சல் பெட்டிகள் பெரும்பாலும் காலியாகவே உள்ளன. இதனால் அவற்றை பொதுமக்கள், சிறுவியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் போக்குவரத்துத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் சிறு, குறு வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் பொருட்களை பல்வேறு ஊர்களுக்கும் அனுப்ப லாரி. மினி டோர் போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். லாரி வாடகைக்கு இணையான தொகையில் அவர்கள் தங்கள் பொருட்களை அரசு விரைவு பேருந்துகள் மூலம் விரைவாக உடனுக்குடன் பல ஊர்களுக்கு அனுப்பும் வகையில் விரைவு பேருந்துகளின் பார்சல் பெட்டிகள் வாடகைக்கு அளிக்கப்பட உள்ளன.
இதனால் பல ஊர்களில் உள்ள பிரபலமான உணவு பொருட்கள், விளைபொருட்களை உடனுக்குடன் அரசு விரைவு பேருந்துகள் மூலம் அனைத்து ஊர்களுக்கும் அனுப்பி வைக்கலாம். இந்த திட்டம் ஆகஸ்டு 3 முதல் தொடங்கப்பட உள்ளது. விரைவு பேருந்து பெட்டிகளை வாடகைக்கு எடுக்க அரசு விரைவுப் பேருந்து கழக கிளை மேலாளரிடம் விண்ணபிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.