1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (19:47 IST)

அரசு மருத்துவர்கள் நாளைமுதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் - மருத்துவர் கூட்டமைப்பு

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வந்தவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பது இது முதலாவது ஆகும். அவரது சடலத்தை அண்ணா நகர் வேலங்காடு பகுதியில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது அவரை அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். மேலும் கற்களை வீசி அவர்கள் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனம் சேதமடைந்தது.  

இதையடுத்து கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு, உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் பாயும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக அறிவித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு முதல்வரும், துணை முதல்வரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், பிற களப்பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். 

அதோடு, உயிர் காக்கும் பணியில் ஈடுபடுபவர்களை இறைவனுக்கு நிகராக கருதுகிறேன் மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரியுள்ளார். 

இதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நமக்காக உயிரை பணயம்வைத்து போராடிய மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்கி மனிதநேயம் காக்க வேண்டும், மருத்துவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்,  அரசு மருத்துவர் கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ’அரசு மருத்துவர்கள் நாளைமுதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும். பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு நாளை இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் மெழுகு வர்த்து ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.’