லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 5 பயணிகள் பலி! – செங்கல்பட்டில் கோர விபத்து!
செங்கல்பட்டு அருகே நெடுஞ்சாலையில் அரசு பேருந்து லாரி மேல் மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்துள்ளது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரியில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. பேருந்தில் சிக்கிய பயணிகள் உதவி கேட்டு அலறியுள்ளனர்.
அங்கு விரைந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பியுள்ளனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.