திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (08:52 IST)

கஸ்டமர் போல வந்து ஓலா டிரைவர் கொலை! – செங்கல்பட்டில் அதிர்ச்சி!

செங்கல்பட்டில் கொள்ளை கும்பல் ஒன்று ஓலா கார் புக் செய்து அதன் டிரைவரை கொன்று விட்டு காரை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சித்தலபாக்கம் அரசங்கழனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன். திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள இவர் ஓலா கால் டாக்சி ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வண்டலூரில் இருந்து செங்கல்பட்டு செல்ல நான்கு பேர் கார் புக் செய்துள்ளனர். காரில் அவர்களை அழைத்துக் கொண்டு அர்ஜுன் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென அர்ஜூனை கழுத்தை அறுத்து கொலை செய்த அவர்கள் அர்ஜுன் உடலை ரோட்டில் வீசிவிட்டு காரை கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் அர்ஜுனின் கார் பெட்ரோல் தீர்ந்ததால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் ஒலா டாக்சி புக் செய்த எண்ணைக் கொண்டு  குற்றவாளிகளான குட்டி முத்து, திருமூர்த்தி மற்றும் பிரசாத் என்ற மூன்று பேரை பெரம்பலூரில் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

ஓலா டாக்சி டிரைவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஓட்டுனர்கள் பலர் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.