1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 19 ஜூன் 2025 (10:20 IST)

உச்சக்கட்ட பாதுகாப்புடன் ரிலீஸாகிறது ‘தக் லைஃப்’! - கர்நாடக அரசு எடுத்த முடிவு!

Thug Life

கர்நாடகாவில் தக் லைஃப் படம் உரிய பாதுகாப்புகளுடன் வெளியாகும் என கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.

 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஜூன் 5ம் தேதி வெளியான படம் தக் லைஃப். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னடம் - தமிழ் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையானதால், அது தொடர்பான வழக்கு நடந்து வருவதால் இந்த படம் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸாகவில்லை.

 

இந்த வழக்கில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், அவரை மன்னிப்பு கேட்க வைப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என நீதிபதிகள் மறுத்தனர்.

 

தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து கர்நாடக அரசு விளக்கமளிக்க கூறப்பட்டது. இதில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள கர்நாடக அரசு, கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகும்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

கர்நாடக அரசு அளித்துள்ள உறுதியின் பேரில் விரைவில் கர்நாடகாவில் தக் லைஃப் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K