1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (19:22 IST)

திமுகவுக்கு ஆதரவு... வாசன் கட்சியில் இருந்து விலகிய ஞானசேகரன் பேட்டி!

ஜி.கே.வாசன் சுயமாக முடிவெடுக்க தெரியாதவர், பட்டியலினத்தவர்கள் உயர் நிலைக்கு வருவதை வாசன் விரும்பவில்லை என ஞானசேகரன் பேட்டி. 

 
திரு வி.க நகர் தொகுதி மாற்று நபருக்கு வழங்கப்பட்டதால் தமிழ் மாநில காங்கிரசிலிருந்து விலகிய ஞானசேகரன் பின்வருமாறு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசேகரன் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது பேசிய அவர் , 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.  திராவிட முன்னேற்ற மக்கள் கழகம் என தனி  கட்சி வைத்திருந்தேன். பிறகு  த.மா.கா வில் இணைத்தோம். எனங்கு த.மா.காவினர் இதுவரை எதுவும் செய்ததில்லை.
 
திரு .வி .க நகர் தொகுதி எனது தொகுதி . பட்டியல் சமூகத்தை சேர்ந்த நான் அதில் போட்டியிட ஜி.கே.வாசனிடம் விருப்பம் தெரிவித்தேன். பூந்தமல்லி தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள த.மா.கா வேட்பளார்களை காட்டிலும் எனக்கு தகுதி அதிகம். பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் முன்னேற கூடாது என நினைப்பவர்களால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 
 
த.மா.காங்கிரசிலிருந்து விலகி விட்டேன். மாற்று கட்சியில் இணைவது குறித்து இனிதான் முடிவு செய்வேன். திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளோம். தனித்து போட்டியிடுவது  இவ்வளவு நாள் இருந்த கட்சிக்கு செய்யும் துரோகமாக அமையும் என்பதால் திரு வி.க நகரில் போட்டியிடவில்லை. 
 
ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 75 சதவீதம் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. தமிழ் மாநில காங்கிரசில் சாதிப் பாகுபாடு இருக்கிறது. நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் வேட்பாளர்களை வாசன் அறிவித்துள்ளார்.
 
மொத்தமுள்ள 6 வேட்பாளர்களில் 3 பேர் வாசனின் உறவினர்கள். மற்ற 2 பேர் வாசனின் உறவினர்கள் சொல்லி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள். வாசன் எனக்கு பச்சைத் துரோகம் செய்துவிட்டார். தலித் மக்கள் உயர் பதவிகளுக்கு வரக்கூடாது என வாசன் நினைக்கிறார்.வாசன் சுயமாக முடிவெடுக்க இயலாத தலைவர். அவருடன் இருப்பதால் பயனில்லை. 5,000 பேர் என்னோடு சேர்ந்து வெளியேறுகின்றனர்.