வன்னியர் சங்க அறக்கட்டளை; ராமதாஸ் பெயரில் மாற்றம் ஏன் ? பாமக தலைவர் விளக்கம் !
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வன்னியர் கல்வி அறக்கட்டளை மருத்துவர் ராமதாஸ் அறக்கட்டளை என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பாமக தலைவர் ஜி கே மணி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வன்னியர் சங்க அறக்கட்டளை, ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியை அடுத்து பாமகவில் சலசலப்பு எழுந்துள்ளது. இதையடுத்து உடனடியாக பாமக தலைவர் ஜி கே மணி இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜி கே மணி அறிக்கை :-
அறக்கட்டளை பெயர் மாற்றம் குறித்து ஊடகங்களிலும் , சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவை அனைத்தும் உண்மைகளை மறைத்து, உள்நோக்கத்துடன் வெளியிடப்படுபவை; ஆகவே அவை கண்டிக்கத்தக்கவையாகும். வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மருத்துவர் அய்யா அவர்களின் கடுமையான உழைப்பால் உருவாக்கப்பட்டது ஆகும். மருத்துவர் அய்யா அவர்களுக்கு தற்போது முத்துவிழா ஆண்டு நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவரும், அறக்கட்டளையை உருவாக்க எண்ணற்ற தியாகங்களை செய்தவருமான மருத்துவர் அய்யாவின் பெயரை அறக்கட்டளைக்கு சூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும், அறக்கட்டளையின் அறங்காவலர்களும் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று மருத்துவர் இராமதாஸ் கல்வி அறக்கட்டளை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு அவர்களை கவுரவப்படுத்தும் வகையில், அறக்கட்டளையின் கீழ் சட்டக்கல்லூரி செயல்பட்டு வரும் பகுதிக்கு மாவீரன் ஜெ.குரு வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல் தான் இப்போது அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மிகவும் சாதாரணமான நடைமுறை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ள போதிலும், அதன் நிர்வாகத்தில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை; அவர் வேறு எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.. அந்த அறக்கட்டளையை அரும்பாடுபட்டு தொடங்கியவர் என்ற அடிப்படையில் அதன் நிறுவனராக மட்டுமே மருத்துவர் அய்யா செயல்பட்டு வருகிறார். அன்றாட நிர்வாகத்திற்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக அறக்கட்டளைக்கு நான் தான் தலைவராக செயல்பட்டு வருகிறேன். எனது தலைமையில் தான் அறங்காவலர் குழு கூடி அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யா அவர்களின் பெயரை சூட்ட தீர்மானித்தது. அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யாவின் பெயரை சூட்டியதில் நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம்.
பெயர் மாற்றத்திற்குப் பிறகும் அறக்கட்டளையின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு சேவை நோக்கத்துடன் தரமான கல்வி, இப்போது வழங்கப்படுவதைப் போலவே எப்போதும் வழங்கப்படும். இந்த உண்மைகளையும், அறக்கட்டளை குறித்த விதிமுறைகளையும் அறியாமல் கட்டுக்கதைகளை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் எழுதும் போக்கை சில முதன்மை ஊடகங்களும், சமூக ஊடகங்களும் கைவிட வேண்டும். மாறாக, உள்நோக்கத்துடன் திட்டமிட்டுஅவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.