வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (16:49 IST)

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்..! தமிழ்நாடு இனி சிறக்கும்.! விஜய் அறிக்கை..!!

இறைவனும் இயற்கையும் அமைத்து கொடுத்த நாளான நாளை, நமது வீரக்கொடியை, கழகப் பாடலை வெளியிடுகிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன் என த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  
 
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் விஜய்  தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்பட உள்ளது. 
 
அதற்கு முன்பாக கட்சிக் கொடியை நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்.  நாளை காலை 9.15 மணியளவில், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
 
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.. சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். 

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

 
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் என்று அந்த அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.