1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (13:52 IST)

இலவச கட்டாய கல்வி: மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள நாச்சியார் வித்யாலயம் பள்ளியில் சுமார் 80 குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவசமாக படித்து வருவதாக தெரிகிறது.  இந்நிலையில் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு இதுவரை எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமாக ரூ.10,500 முதல் ரூ.15,500 வரை கட்டி வந்த நிலையில் அதற்கு எந்தவிதமான ரசீதும் இதுவரை கொடுக்கவில்லை என்றும்
 
தற்போது 2023-24 ஆம் ஆண்டிற்கான கல்வி கட்டணமாக ரூ.25 ஆயிரம் வரை பள்ளி நிர்வாகம் நிர்ணயித்து தொகையை கட்ட நிர்பந்தம் செய்வதாக கூறி பெற்றோர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 
 
இது குறித்து மனுதாரர்கள் கூறியதாவது. சீருடை , புத்தகம், பிற கூடுதல் பயிற்சிக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்து வந்த நிலையில், தற்போது சிபிஎஸ்சியாக பள்ளி தரம் உயர்த்தப்படுவதால் இக்கட்டணத்தை செலுத்த பள்ளி நிர்வாகம் கட்டாயபடுத்துவதாகவும் 
உடனடியாக கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், அரசு அறிவித்த கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் இலவச கல்வி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.