கஜா பாதிப்பு: கால்நடைகளுக்கு உடனடியாக தீவனம் தர உத்தரவு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தீவனம் வழங்க தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். மீளா துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த பேரழிவில் ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மீதமுள்ள கால்நடைகளும் உண்ண உணவின்றி தவித்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதிமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இந்நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தீவனம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.