பச்சை நிறமாக மாறிய கடல்; செத்து மிதக்கும் மீன்கள்! – ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!
ராமநாதபுரம் கடல் பகுதி திடீரென பச்சை நிறமாக மாறிய நிலையில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை ஓர பகுதிகளில் சில நாட்களாக கடல் பச்சை நிறத்தில் காணப்பட்டு வருகிறது. பச்சை நிற பாசிகள் பலவும் கரை ஒதுங்கிய நிலையில் நேற்று முதலாக கடற்கரை ஓரமாக மீன்கள் பல இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. அதேபோல பாம்பன் பகுதியில் டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது.
இதுகுறித்து அறிந்த மீன்வள ஆராய்ச்சியாளர்கள் மாதிரிகளை கொண்டு சென்று ஆய்வு செய்துள்ளனர். பிறகு விளக்கமளித்துள்ள அவர்கள் “ஆண்டுதோறும் இந்த கடல்பகுதியில் செப்டம்பர், அக்டோபர் வாக்கில் பூக்கோரை என்னும் கடல்பாசிகள் படர்வது வழக்கம். இதனால் கடல் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இந்த பாசிகளை தின்றதால் மீன்கள் செதில்கள் அடைக்கப்பட்டு இறந்திருக்கலாம். பெரும்பாலும் ஓரா, சூடை ரக மீன்களே இறந்துள்ளன” என தெரிவித்துள்ளனர்.