நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு
காப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய விவசாய உற்பத்தியில் மண்ணை மலடாக்கும் உரம், பூச்சிக் கொள்ளி மருந்துகள் பயன்பாட்டை கைவிட்டு, இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மண்புழு வளர்ப்பு மற்றும் இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதின் அவசியம் குறித்து இப்படம் உணர்த்துகிறது. அத்துடன், உலக பெருமுதலாளிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் கனிம வளங்களை எடுப்பதற்கு நிலங்களை அபகரிக்க மேற்கொள்ளும் சதி செயல்களையும் இந்த திரைப்படம் அம்பலப்படுத்துகிறது.
மேலும், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் அமைதி வழிப் போராட்டக் களத்தில் அதிகார வர்க்கமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக குண்டர்களை அனுப்பி, வெடிகுண்டு வீசி கலவரத்தை உருவாக்குவது, போராடும் விவசாயிகளை காவல்துறையே துப்பாக்கியால் சுடுவதுடன், விவசாயிகளை நக்சல்கள் என சித்தரிக்க முயற்சிக்கும் சுயநலவாதிகளின் தேசதுரோகத்தை இப்படம் வெளிப்படுத்துகிறது.
அதே வேளையில் இந்திய விவசாயிகளின் பெருமைகளையும், உணவு உற்பத்தியின் தேவையையும் வெளிப்படுத்தும் உயரிய லட்சியத்துடன் இப்படம் வெளிவந்துள்ளது. காவிரி டெல்டாவைக் காக்க வந்த காப்பான் திரைப்படம் விவசாயிகளின் ஒற்றுமையையும், போர் குணத்தையும் ஊக்கப்படுத்துகிறது. எனவே, இப்படக் குழுவினரை மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
இவ்வாறு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்