செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (19:08 IST)

இந்திய ரயில்வே தனியார் வசம் தாரை வார்த்து கொடுக்கப்படுகிறதா?

இந்தியாவின் முக்கிய ரயில் வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்கத் இந்திய ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்கவுள்ள ரயில்வே அமைச்சக கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக நாட்டில் சில முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களை தனியார் மூலம் இயக்க திட்டம் உள்ளதாகவும், பிறகு பல பெருநகரங்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ரயில்வேத்துறை தொழிற்சங்கங்கள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அவை அச்சம் தெரிவித்துள்ளன.

நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுகிறது என்றும், ஆட்குறைப்பு நடைபெறுவதாகவும் தொடர்ந்து கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ரயில்வேதுறையின் இந்த திட்டம் குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனால் பயணிகள் கட்டணம், சேவை உள்ளிட்ட அம்சங்களில் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், இந்திய ரயில்வே பயணிகள் வசதி மேம்பாட்டு வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான ஆசிர்வாதம் ஆச்சாரி பிபிசி தமிழிடம் பேசினார்.

''ரயில்வே துறையை தனியார்மயமாக்க நடக்கும் முயற்சி இது என்று கூறப்படுவது தேவையில்லாத அச்சம் மற்றும் குற்றச்சாட்டு. PPP எனப்படும் பொதுத்துறை - தனியார் நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பு முயற்சிதான் இது,'' என்று ஆசிர்வாதம் ஆச்சாரி கூறினார்.
 

''ரயில்கள், வழித்தடம் என எல்லாம் அரசிடம் தான் இருக்கும். சில ரயில்கள் தனியார் மூலம் இயக்கப்படும். அவ்வளவுதான். ரயில்வேத்துறையையே தனியாரிடம் விற்றுவிட்டது போல கூறுவது முற்றிலும் தவறு,'' என்று அவர் கூறினார்.

''இது நாளையே முடிவு செய்யப்பட்டு, நாளை மறுநாளே அமலுக்கு வரப்போகும் திட்டம் அல்ல, இதற்கு நீண்ட காலம் ஆகும். ரயில்வே அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகுதான் மற்ற விஷயங்கள் தெளிவாகும்'' என்று அவர் கூறினார்.

ஏன் இந்த முயற்சி என்று கேட்டதற்கு, ''அடுத்த 11 ஆண்டுகளில் (2030-ஆம் ஆண்டுக்குள்) ரயில்வேதுறையை நவீனப்படுத்த கிட்டதட்ட 50 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மத்திய அரசின் ரயில்வேத்துறை ஒதுக்கீட்டில் இந்த அளவு நிதி கிடைக்காது. இதனால் விரைவாக பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும், ரயில்வேத்துறையை நவீனமாக்கவும் எடுத்த முயற்சி இது'' என்று ஆசீர்வாதம் ஆச்சாரி குறிப்பிட்டார்.

இதனால் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுவது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், ''நிச்சயமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் தற்போதைய கட்டணங்களைவிட குறையவும் வாய்ப்புள்ளது. ரயில் கட்டணங்களை உறுதி செய்வது தொடர்பாக ஒழுங்குமுறை குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் தனியார் சார்பாக யாரும் இடம்பெறமாட்டார்கள். திட்டக்குழு மற்றும் ரயில்வேதுறையை சார்ந்தவர்களே இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவதாக இருந்தால் இந்த குழு அதனை கட்டுப்படுத்தும். ஒவ்வொரு வழித்தடத்துக்கும் அதிகபட்ச கட்டண நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கு மேல் உயராமல் கண்காணிக்கவும் செய்யும்'' என்று கூறினார்.

சில ரயில்களை தனியார் நிறுவனங்கள் இயக்குவதால், ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படமாட்டார்கள், மாறாக கூடுதல் ஊழியர்களே பணியில் அமர்த்தப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ரயில்வேத்துறை பல நிறுவனங்களாக இருந்தது. சுதந்திரம் கிடைத்த பிறகு அவை மண்டல ரயில்வேக்களாக மாற்றப்பட்டு, அதுவே இந்திய ரயில்வே துறையாக மாறியது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''ரயில்வே துறையை யாருக்கும் தாரை வார்த்து கொடுக்கவில்லை; அது இந்தியாவின் சொத்து'' என்று முத்தாய்ப்பாக ஆசிர்வாதம் ஆச்சாரி கூறினார்.
ரயில்வே துறையை நவீனப்படுத்த இந்த முயற்சிகள் எடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ரயில் பயணிகள் நல சங்கத்தை சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், ''இந்தியாவில் எண்ணற்ற மக்கள் ரயிலை தங்கள் சிநேகிதனாகத்தான் பாவிக்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த பந்தம் தொடர்கிறது. இவ்வாறான நிலையில் இந்த செய்தி சலனத்தை ஏற்படுத்துகிறது'' என்று கூறினார்.

''இது அமலாகும் பட்சத்தில் ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம். குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டண நிர்ணயங்கள் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டு, வேறு வழியின்றி புதிய கட்டணங்களை மக்கள் ஏற்ககூடிய நிலை வரலாம். ரயில்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும்,'' என்று தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.

முக்கிய வழித்தடங்களில் ஓடும் ரயில்கள் தனியார் மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து இந்திய ரயில்வேத்துறை மக்கள் தொடர்பு அதிகாரியான அணில் சக்சேனா கூறுகையில், ''காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்வது தவிர்க்க இயலாதது. நவீனமயமாக்குவது மற்றும் பயணிகள் வசதிகள் மேம்பாடு போன்றவற்றை ரயில்வேத்துறை முக்கியமாக கருதுகிறது'' என்று கூறினார்.

''ரயில்வேதுறையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுவது தவறு. ஆரம்ப நிலையில் சில பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. இது ஒரு நீண்ட செயல்முறை திட்டம். தற்போதைய நிலையில் கூறுவதற்கு வேறு எதுவும் தகவல்கள் இல்லை'' என்று அவர் மேலும் கூறினார்.
ரயில்வேத்துறையை எந்தவொரு பிரிவு அல்லது பகுதியையும் தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு எடுக்கக்கூடாது என்பது பயணிகள் மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கையாக இருக்கும் சூழலில், ரயில்வேதுறையை நவீனப்படுத்தவும், நடப்பு சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யவும் சில முயற்சிகள் தேவை என்பது அரசு தரப்பு பதிலாக உள்ளது.