சினிமா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்
சினிமா டிக்கெட் வாங்கினால் 30% சலுகை என்ற ஆசை காட்டி ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் ஒரு நூதன விளம்பரம் கொடுத்தார். அதன்படி கொடைக்கானலில் உள்ள ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு டிக்கெட் விலையில் 30% தள்ளுபடி என்று அறிவித்தார்.
இதனை நம்பி ஆன்லைனில் பலர் தங்களுடைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் எடுத்தனர். ஆனால் அந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விபரங்களை கொண்டு போலி கார்டுகளை தயாரித்து அவர்களுடைய வங்கிக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார் அந்த சென்னை இளைஞர்
இதனையடுத்து கொடைக்கானல் தியேட்டர் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து அந்த இளைஞரை பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் இம்ரான்கான் என்றும், சென்னையை சேர்ந்த சித்தலப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் ஏற்கனவே அவர் மீது ஒருசில மோசடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து போலி ஏடிஎம் கார்டுகள் மற்றும் கார்டுகள் தயாரிக்கும் எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது