வியாழன், 30 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2026 (19:02 IST)

எல்லா கருத்துக்கணிப்பிலும் முதலிடம்!.. மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக?...

exit poll
2026ம் வருடத்திற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. 234 தொகுதிகளில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை வரிசையில் நின்று வாக்களித்தனர்.

வழக்கமாக அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி நிலவும் என்கிற நிலையில் இந்த முறை புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் அடிப்படையில் விஜய் ஒரு பிரபலமான நடிகர் என்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எங்கு சென்றாலும் அவரைக்காண மக்கள் கூட்டம் கூடுகிறது. எனவே இந்த தேர்தலில் அவர் பெரிய தாக்கத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகவும் அதிகமாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. ஒரு பக்கம் விஜயின் ஆதரவாளர்களும், தவெக தொண்டர்களும் இந்த முறை விஜய்தான் முதல்வராக வந்து ஆட்சியை பிடிப்பார் என்றெல்லாம் கூறிவரும் நிலையில் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி தமிழகத்தில் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. திமுக 145 - 160 தொகுதிகளிலும், அதிமுக 50-65 தொகுதிகளிலும், விஜயின் தவெக 13 -18 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 5 - 8 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டிருக்கிறது,

மொத்தம் 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப் பெரும்பான்மை என்கிற நிலையில் திமுக 145 தொகுதிகள் முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனவும், திமுக தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்கும் எனவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல் People's Pulse என்கிற நிறுவனம் எடுத்துள்ள சர்வேயின்படி திமுக 125 - 145 தொகுதிகளிலும், அதிமுக 65 - 80தொகுதிகளிலும், தவெக 18 - 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும், நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் MATRIZE என்கிற நிறுவனம் எடுத்துள்ள சர்வேயின்படி திமுக 122 - 132 தொகுதிகளிலும், அதிமுக 87 - 100 தொகுதிகளிலும், தவெக 10 - 12 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. எப்படிப்பார்த்தாலும் எல்லா கருத்துக்கணிப்புகளிலும் திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும் என கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.