ரிசல்ட் குளறுபடிகளுக்கு தலைமையாசிரியர்கள்தான் காரணம்! - தேர்வுத்துறை பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குழப்பத்திற்கு பள்ளி தலைமையாசிரியர்களே காரணம் என தேர்வுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறாத நிலையில் விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்ததாக கூறப்பட்ட நிலையில் 9 லட்சத்து 39 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியாகின. 5,177 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாதது குறித்து குழப்பம் எழுந்துள்ளது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்களை குற்றம் சாட்டியுள்ளது தேர்வுத்துறை. அதிக மாணவர்கள் எண்ணிக்கை இல்லாவிட்டால் தேர்வு மையத்தை மாற்றி விடுவார்கள் என்பதற்காக மாணவர்கள் எண்ணிக்கையை பள்ளிகளே அதிகரித்து காட்டியுள்ளதாக தேர்வுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.