ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (09:39 IST)

பணி மாறுதலில் செல்லும் ஆசிரியரை சீர் வரிசை, தாரைதப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்று வழி அனுப்பி வைத்த முன்னாள் மாணவர்கள்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தா.சொக்கநாதபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 2010 ம் ஆண்டு முதல் ராஜேஸ்வரி என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 
 
இவர் பணியில் சேர்ந்தது முதல் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பயிற்றுவிப்பது மட்டுமில்லாமல் மாணவர்கள் நலனில் அக்கரையோடு அன்பையும் ஊட்டி கற்பித்து வந்ததால் மாணவர்கள் ஆசிரியர் ராஜேஸ்வரி மீது பற்றுதலுடன் இருந்துள்ளனர். ஆசிரியை என்ற நிலையையும் தாண்டி மாணவர்களின் தாயைப்போன்று இருந்து மாணவர்கள் இப்பள்ளியில் நடுநிலைக் கல்வியை முடித்து அடுத்த பள்ளிக்கு சென்றாலும் அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தையும் செலுத்திய தோடு மட்டுமல்லாமல் உயர்கல்விக்கும் வழிவகுத்துக்கொடுத்துள்ளார். 
 
மேலும் உயர்கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கும் உதவிசெய்துள்ளார். இதனால் ஆசிரியை ராஜேஸ்வரி மாணவ, மாணவிகள் மத்தியில் ஒரு ஆசிரியையாகவும், தாயாகவும், நண்பராகவும் இருந்து அவர்களை வழிநடத்தும் போற்றுதலுக்குறிய பணியினை செய்து மாணவர்களின் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார். மிகவும்‌ பின்தங்கிய கிராமத்தில் மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியாக சிறப்பான பணியினை செய்து வந்ததால் பெற்றோர்களுக்கும் ஆசிரியை மீது அதீதபற்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியை ராஜேஸ்வரிக்கு அவரது சொந்த மாவட்டமான திருப்பூருக்கு பணி மாறுதல் கிடைத்துள்ளது. ஆசிரியை ராஜேஸ்வரியின் பணி மாறுதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும்‌ அவரது பணியினை போற்றும் விதமாக முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு ஆசிரியைக்கு விளம்பர பதாகை வைத்து வாழ்த்து தெரிவித்தனர். கடைசி நாளாக இன்று பள்ளிக்கு வந்த ஆசிரியருக்கு முக்கண்பாலம் என்ற இடத்தில் பட்டாசு வெடித்து, தப்பாட்டத்துடன் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது பழங்கள், இனிப்பு வகைகள், முறுக்கு, அதிரசம், காய்கறிகள், தேங்காய், வாழைப்பழம், சேலை என சீர் வரிசைப்பொருட்களை தட்டில் வைத்து ஆசிரியரை பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பள்ளியின் முன்பு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கேக்வெட்டிய ஆசிரியை ராஜேஸ்வரி அதனை மாணவர்களுக்கு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.
 
அப்போது ஆசிரியர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை மெகா சைஸில் பிரிண்டிங் செய்து அதனை நினைவுப்பரிசாக வழங்கினார். 
 
பின்னர் முன்னாள் மாணவர்கள் ஆசிரியை காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். மாணவ, மாணவிகள் பணி மாறுதலில் செல்லும் ஆசிரியரின் பணியை போற்றி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.