திட்டமிட்டபடி அதே தேதியில் திருமணம்: அதிமுக எம்.எல்.ஏ உறுதி
பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் அவர்களுக்கு சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு வரும் 12ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தபோது நேற்று திடீரென மணமகள் சந்தியா மாயமானார். அவர் ஒரு இளைஞரை காதலித்து வருவதாகவும், அவருடன் சந்தியா சென்றிருக்கலாம், என்றும் தனது மகளை கண்டுபிடித்து தருமாறும் சந்தியாவின் தாய் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த இந்த திருமணம் திடீரென தடைபட்டதால் மணமகன் ஈஸ்வரன் அதிர்ச்சி அடைந்தாலும் திட்டமிட்டபடி அதே தேதியில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறும் என உறுதி கூறியுள்ளார் இதனையடுத்து ஈஸ்வரனுக்கு அவரது வீட்டினர் அவரது சமூகத்தை சார்ந்த ஒரு பெண்ணை தேடி வருவதகவும் இன்னும் ஓரிரு நாட்களில் மணப்பெண் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாயமான சந்தியாவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சந்தியா கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர் 23 வயது மேஜர் என்பதால் அவர் மீது சட்டப்படி எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதும், அவர் விரும்பியவருடன் வாழ அவருக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது