இபிஎஸ் வேட்பாளருக்கு அமோக ஆதரவு! அதிமுக வேட்பாளராக தென்னரசு?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு தேர்வாவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரில் யார் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் 90 சதவீதம் வாக்குகள் எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் தென்னரசுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று வாக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் தென்னரசு தேர்வு செய்யப்பட்டால் அதை ஓபிஎஸ் அணியினர் ஏற்று தங்கள் வேட்பாளரின் வேட்பு மனுவை திரும்ப பெறுவார்களா அல்லது சுயேட்சையாக போட்டியிடுவார்களா என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
Edit by Prasanth.K