1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (08:22 IST)

2 நாட்களில் மின்சார பிரச்ச்னைகள் சரி செய்யப்படும் - செந்தில் பாலாஜி

மின் நுகர்வோர் சேவை மையத்தில் புகார் அளித்த 2 நாட்களுக்குள் மின்தடை உள்ளிட்ட மின்சாரம் குறித்த அனைத்து புகார்களும் சரிசெய்யப்படும் என உறுதி. 

 
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் சேவை மையத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். உடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில் பொதுமக்களின் மின்தடை உள்ளிட்ட குறைகள் குறித்து தெரிவிக்க மின்சேவை மையம் துவங்கப்பட்டதாகவும், இந்த மையத்தில் புகார் அளித்த 2 நாட்களுக்குள் அந்த குறை நிவர்த்தி செய்யப்படும் எனவும், மின்சேவை மையத்தில் ஒரு ஷிப்டில் ஒரு மாவட்டத்திற்கு 3 பேர் என மொத்தம் 138 பணியாளர்கள் பணி புரிவார் எனவும் தெரிவித்தார். 
 
மேலும் பொதுமக்கள் புகார் குறித்து 9498794987 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் புகார் குறித்து பொதுமக்கள் தொலைபேசி எண்ணிற்கு புகார் எண் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் எனவும், அந்த புகார் எண் மூலம் பொதுமக்கள் தங்களின் புகார் குறித்து அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். 
 
மேலும் 1500 மின் ஊழியர்கள் பணி நியமனம் குறித்து சட்டபேரவையில் முடிவு எடுக்கப்படும் எனவும், கடந்த ஆட்சியில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை எனவும், அதனால் தான் தமிழகலத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.