ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (22:21 IST)

நெல்லையில் 2293 பதவிகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய கடைசி தினம் செப்டம்பர் 22 என்றும், வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23 என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 என்றும், அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் 2293 பதவிகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 
நேரடியாக 2069 பணி இடங்களுக்கும் மறைமுகமாக 224 பணியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 986 பேர் வாக்களிக்க உள்ளனர்.
 
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக 20 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 277 உதவி அலுவலர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும், நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 1188 வாக்குச்சாவடி மையங்களில் 4051 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.