அப்போ ஒரு பேச்சு.. இப்போ ஒரு பேச்சா..? டாஸ்மாக்கை மூடுங்கள்! – எடப்பாடியார் அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து விரிவான அறிக்கையை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில் அவர் “தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தபோது தற்போதைய திமுக அரசு அதை மறுத்தது. ஆனால் தற்போது தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் மேல் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். ஆனால் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500 என்ற அளவிலேயே இருந்தது.
ஆனால் அதற்கே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அப்போதைய எதிர்கட்சியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சியினர் ஆங்காங்கே கருப்புக் கொடியேந்தி ஆர்பாட்டம் செய்தனர். ஆனால் தற்போது 20 ஆயிரம் பாதிப்புகளை தாண்டியுள்ளபோதும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் உள்ளனர். அப்போது ஒரு பேச்சு.. இப்போது ஒரு பேச்சு என திமுக செயல்படுகிறது. தமிழகத்தில் தொற்று கட்டுக்குள் வரும்வரை டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.