ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (13:23 IST)

பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற டிரைவர்.. சரமாரியாக கேள்வி எழுப்பிய சிங்கப்பெண்

மதுரையில் பேருந்து நிலையத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் காத்திருந்த நிலையில் பேருந்து நிற்காமல் சென்றது. இதனை அடுத்து அந்த பேருந்தில் இருந்த இளம் பெண் ஒருவர் டிரைவர் மற்றும் கண்டக்டரை உலுக்கி எடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இருந்தாலே அந்த பேருந்து நிலையத்தில் பல பேருந்துகள் நிற்காமல் சென்று விடுகிறது என்று கூறப்படுகிறது. பெண்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏறினால் டிக்கெட் இல்லை என்பதால் தங்களுக்கு வருமானம் கிடைக்காது என்பதால் தான் டிரைவர் கண்டக்டர்கள் இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரையில் பள்ளிக்கு செல்வதற்காக மாணவர்கள் ஒரு பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிலையில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து நிற்காமல் சென்றது. மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை அந்த பேருந்தில் இருந்த இளம் பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

எதற்காக பேருந்து நிற்காமல் செல்கிறீர்கள்? இது என்ன உங்கள் சொந்த பேருந்தா? உங்கள் மகனோ அல்லது மகளோ இந்த பேருந்து நிலையத்தில் இருந்திருந்தால் இவ்வாறு செய்வீர்களா? என உலுக்கி எடுத்த நிலையில் பதில் பேச முடியாமல் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அமைதியாக இருந்த காட்சி அந்த வீடியோவில் உள்ளன.

இதனை அடுத்து பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றாமல் சென்ற டிரைவர் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Edited by Mahendran