ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (10:44 IST)

இலவசப் பேருந்துகளால் நஷ்டம்.. ஆயிரக்கணக்கான தடங்களில் பேருந்துகள் நிறுத்தமா? சீமான் கண்டனம்..!

Seeman
இலவசப் பேருந்துகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட திமுக அரசு ஆயிரக்கணக்கான தடங்களில் பேருந்துகள் சேவையை நிறுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில், 1,40,000 தொழிலாளர்களுடன், நாள்தோறும் 2 கோடி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டு வந்த அரசுப்போக்குவரத்துத்துறையை முழுதாக சீரழித்துள்ளது திமுக அரசு. கடந்த 2017ஆம் ஆண்டு வரை 23,000 பேருந்துகள் இயங்கி வந்த அரசுப்போக்குவரத்துத்துறையில், தற்போது 4,000 பேருந்துகள் வரை குறைக்கப்பட்டு, வெறும் 19,000 பேருந்துகள் மட்டுமே இயங்கும் அவலநிலை காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இலவசப் பேருந்துகளால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட திமுக அரசு ஆயிரக்கணக்கான தடங்களில் பேருந்துகள் சேவையை நிறுத்தி பெருங்கொடுமையையும் புரிந்துள்ளது. 
 
அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாகவுள்ள 25,000 பணியிடங்களுக்கு, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படாதது ஏன்? பணியின்போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகள் 8,000 பேருக்கு, கருணை அடிப்படையில் வழங்க வேண்டிய வாரிசு வேலையை வழங்க மறுப்பது ஏன்? 90,000 போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காதது ஏன்? நிதிநிலையைக் காரணம் காட்டி பணப்பலன்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், போக்குவரத்து ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி 13,000 கோடி ரூபாயையும் சிறிதும் மனச்சான்றின்றி திமுக அரசு எடுத்துக்கொண்டது ஏன்? 
 
இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படாதது ஏன்? மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பினை ஒவ்வொரு ஆண்டும் ஈடுகட்டும் தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் இழப்பினை மட்டும் ஈடுகட்ட மறுப்பதேன்? பேருந்துகள் தனியார்மயம், ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஊழியர்களை நியமிப்பது என போக்குவரத்துக் கழகங்களைச் சீர்குலைக்க முயல்வது ஏன்? என்ற கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?
 
உலக முதலீட்டாளர்களையெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைத்துவந்து, பல இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளதாக பெருமை பேசும் திமுக அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட வழங்கமுடியாமல் திணறுவது ஏன்? இதுதான் திமுக அரசு ஏற்படுத்திய நூற்றாண்டு வளர்ச்சியா? மதுக்கடைகளைத் தவிர மற்ற அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்ப்பதுதான் திராவிட மாடல் சாதனையா? போக்குவரத்துத்துறையையில் தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால் அவர்களின் உரிமைகளை யார் பாதுகாப்பது? இதில் எங்கே இருக்கிறது சமூகநீதி? போக்குவரத்துக் கழகத்தையே லாபத்தில் நடத்த திறனற்ற திமுக அரசு, பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மக்களின் வறுமையைப் போக்கும் என்பதை எப்படி நம்ப முடியும்? 'எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சியை நடத்துகிறோம்’ என்று கூறிவிட்டு, குறையைத் தவிர வேறு எதையுமே கூற முடியாத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள்.    
 
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படி முழுதாக வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்து அதிகாரத்தை அடைந்த திமுக, தற்போது அதனை நிறைவேற்ற மறுப்பது போக்குவரத்து ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். பொதுப்போக்குவரத்தை முழுமையாக நம்பியுள்ள ஏழை-எளிய மக்கள், தொழிலாளிகள், தினக்கூலிகள், சிறு  வியாபாரிகள், மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள், பெண்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படாமலிருக்க அரசு போக்குவரத்துக்கழகத்தைப் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.
 
ஆகவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படியை வழங்குதல், பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துதல், கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்க முன்னுரிமை, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புதல், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்டுதல், இதர அரசுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மருத்துவக் காப்பீடு, பணப்பலன் வழங்குதல், பேருந்துகளையும் - போக்குவரத்து பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிடுதல் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித்தரவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran