வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (16:46 IST)

தொண்டர்களுக்கு ராமதாஸ் டிவிட்டரில் சமாதானம் – கூட்டணி பலமா ? பலவீனமா ?

அதிமுக வுடனான கூட்டணியால் தொண்டர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க டிவிட்டரில் நம்பிக்கையளிக்கும் விதமாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாமக, அதிமுக வுடன் கூட்டணி வைத்தாலும் வைத்தது ஒரே நாளில் மொத்த தமிழக அரசியல் சூழலும் பாமகவுக்கு எதிராக மாறிவிட்டது. கூட்டணிப் பற்றி பாமகவின் முந்தைய நிலைப்பாடுகளை எல்லாம் சுட்டிக்காட்டி இப்போது பாமகவையும் ராமதாஸையும் அன்புமணி ராமதாஸையும் வைத்து செய்து வருகின்றனர்.

திராவிடக் கட்சிகளுடனானக் கூட்டணிக் குறித்து முன்பு விளக்கமளித்த ராமதாஸ் ‘கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும் பைந்தமிழ் உள்ளளவும் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ எனவும் திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி வைப்பது ‘பெற்ற தாயுடன் உறவுக் கொள்வதற்கு சமம்’ என்றும் கூறியிருந்தார். அதை சுட்டிக்காட்டி இப்போது கடல் நீர் வற்றிவிட்டதா அல்லது பைந்தமிழ் இறந்துவிட்டதா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த விமர்சனங்கள் எல்லாம் கட்சிக்கு வெளியில்தான் என்றால், கட்சிக்கு உள்ளேயும் இந்தக் கூட்டணி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியை விட்டு விலகி தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளனர். அதனால் அதிமுக மற்றும் பாஜக உடனான இந்தக் கூட்டணி பாமக வுக்கு பலமா இல்லை பலவீனமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தொண்டர்களை சமாதானப்படுத்தும் விதமாக ராமதாஸ் டிவிட்டரில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் ‘நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருங்கள். கடுமையாக உழையுங்கள்- நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். புதிய விஷயங்களை தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிலும் மகிழ்ச்சியான, உண்மையான, நட்பான மனிதர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்! ’ எனத் தெரிவித்துள்ளார்.