செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (15:21 IST)

பாராட்டு மட்டும்தான் வந்தது ; ஓட்டு வரவில்லை – கூட்டணிக் குறித்து அன்புமணி விளக்கம் !

அதிமுக வுடனானக் கூட்டணிக் குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டுக் கட்சிகளையும் கடந்த காலங்களில் பாமக கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. குட்கா மற்றும் இன்னபிற வழக்குகளில் அதிமுக அமைச்சர்கள் 27 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமாக ஆளுநர்களிடம் புகார் அளித்தனர்.

ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. 7 மக்களவை சீட். ஒரு மாநிலங்களவை சீட் மற்றும் தேர்தல் நிதி ஆகியவற்றிற்காக அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் பாமக மீதும் அதன் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது சம்மந்தமாக விளக்கமளிக்க இன்று தி நகரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அன்புமணி. அப்போது பத்திரிக்கையாளர்கள் சரம்வாரியாக கேள்விகள் கேட்க அன்புமணி திக்கித் தினறி பதில் கூறினார். அதில் அதிமுக வுடனானக் கூட்டணிக் குறித்து ‘அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளோம். ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் உள்ளிட்ட திட்டங்களை வரவிடாமல் இருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் உறுதியளித்துள்ளார். எழுவர் விடுதலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என அதிமுக தெளிவுபடுத்தியிருக்கிறது. கூட்டணிக்கு உள்ளிருந்து நீட் மற்றும் மது விலக்கு ஆகிய விஷயங்களில் நாங்கள் அழுத்தம் கொடுப்போம். கூட்டணிக்கான காரணம் அதிகாரத்தில் இருந்து மக்களுக்கு சேவை செய்யவே. இரு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என 2011-ல் சொன்னோம். உண்மை தான், மறுக்கவில்லை. அன்றைய சூழல் வேறு. அப்போது ஜெயலலிதா, கருணாநிதி இருந்தனர் இப்போது இருவரும் இல்லை.‘ எனத் தெரிவித்தார்.

மேலும் தனித்துப் போட்டியிடாததற்குக் காரணமாக ‘தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு 3-வது இடம் வகித்தோம். அதற்கான அங்கீகாரம் எங்களிக்கு கிடைக்கவில்லை. தமிழக மக்கள், தேர்தல் அறிக்கையைப் பாராட்டினார்கள். ஆனால், ஓட்டுப் போடவில்லை. பாமகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை’ எனக் கூறினார்.

பத்திரிக்கையாளர்கள் விடாமல் பாமக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றியக் கேள்வி எழுப்பிய போது அன்புமணி பாதியிலேயே பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு கிளம்பினார்.