ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (08:43 IST)

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறந்து 40 நாட்கள் ஆகியும் இந்த நிலைமையா? கிருஷ்ணசாமி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து 40 நாட்களாகியும் இன்னும் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக போதிய பேருந்துகள் வரவில்லை என பயணிகள் திடீரென மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு முன்பே பயணிகளை ஏற்றுக் கொள்ளும் பேருந்துகள் நேராக தென் மாவட்டத்திற்கு சென்று விடுகின்றன என்றும் இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு போதிய பயணிகள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு குடும்பம் குடும்பமாகப் பயணிக்கக் குழந்தைகளோடு இரவு நேரங்களில்  வருபவர்கள் தொலைதூர மாவட்டங்களுக்குச் செல்ல முடியாமல் பல மணி நேரங்கள் காத்துக் கிடப்பது அவலத்திலும் அவலம்.

இரண்டொரு நாள் அல்லது ஓரிரு வாரம் என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால், பேருந்து நிலையம் திறந்து ஏறக்குறைய 40 நாட்கள் ஆகியும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாதது ஏற்புடையதல்ல.

போதிய இணைப்பு மற்றும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அதிகரிப்பதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரச்சனைக்கு தமிழ்நாடு அரசு விரைந்து தீர்வு காண வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்  கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Edited by Siva