செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2025 (14:00 IST)

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

Boeing 787 Dreamliner

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான நிலையில் அந்த போயிங் மாடல் விமானங்கள் அனைத்தும் ஆபத்தில் உள்ளதாக அமெரிக்க பொறியாளர் எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அகமதாபாத்தில் ஏர் இந்தியா 171 விமானம் விபத்திற்கு உள்ளான நிலையில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விமான விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் விபத்திற்குள்ளான போயிங் 787 மாடல் விமானங்கள் குறித்து அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் வெளியிட்டுள்ள கருத்துகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. போயிங் நிறுவனத்தின் 787 ட்ரீம்லைனர் என்ற விமானம்தான் தற்போது விபத்திற்குள்ளானது. இந்த விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளை சந்திக்கும் என தான் முன்னரே எச்சரித்ததாக சாம் சலேபார் கூறியுள்ளார். அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.

 

அதில் அவர் “போயிங் 787 ட்ரீம்லைனர் உற்பத்தியில் சில குறைபாடுகளை கவனித்தேன். Fuselage எனப்படும் விமான பாகங்களை இணைக்கும்போது சரியான இணைப்பு முறைகளை பின்பற்றவில்லை. பொருந்தாத பாகங்கள் மீது ஊழியர்கள் ஏறி குதித்து அவற்றை சரி செய்தனர். இது ஆரம்பத்தில் சரியாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான பயணங்களுக்கு பிறகு இந்த குறைபாடு பேரழிவை ஏற்படுத்தும், மேலும் மாசுபடிந்த குழாய்கள் விமானங்களின் ஆக்சிஜன் அமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அவை முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால் பெரும் வெடி விபத்திற்கு வழி வகுக்கும்” என எச்சரித்துள்ளார்.

 

இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போயிங் நிறுவன விமான தயாரிப்புகள் குறித்து பாதுகாப்பு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன.

 

Edit by Prasanth.K