“என்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்” - தொண்டர்களுக்கு துணை முதல்வர் வேண்டுகோள்..!
என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது என்றும் அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், நம் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன.
எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என்று உதயநிதி கேட்டுக் கொண்டுள்ளார். என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.