1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 15 ஜூன் 2024 (10:39 IST)

இன்று திமுக முப்பெரும் விழா..! கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடு..!!

Stalin
கோவை கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 
 
நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 21 இடங்கள், கொமதேக உதயசூரியன் சின்னத்தில் ஒரு இடம் என 22 இடங்களில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
 
இதனையடுத்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த ஜூன் 8ஆம் தேதி மாலை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக வெற்றி பெற்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.
 
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, இந்தியாவே வியந்து பார்க்கும் இந்த வெற்றிக்கு நம்மை அழைத்துச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா - ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா ஜூன் 14-ம் தேதி கோவையில் கொண்டாடுவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
 
ஆனால், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “திமுக முப்பெரும் விழா ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன்15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
 
Dmk
அதன்படி, இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது.  இதற்காக கோவையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
 
திமுக முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ செயலாளர் முத்தரசன், சிபிஐ(எம்) செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.