யாருடன் கூட்டணி?.. ஜனவரி 5ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
மறைந்த நடிகர் விஜயகாந்தால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிதான் தேசிய திராவிட முன்னேற்ற கழகம். துவக்கத்தில் தனியாக மட்டுமே தேர்தலை சந்தித்த தேமுதிக ஒரு கட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் தேமுதிக அதிக வாக்குகளை வாங்கியதோடு அதிக இடங்களிலும் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார்.
ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறைந்துவிட்ட நிலையில் அவரின் மனைவி பிரேமலதா மற்றும் மூத்த மகன் பிரபாகரன் ஆகியோர் தேமுதிகவை வழி நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.
சென்றமுறை ஒரு மேல் சபை எம்பி என்கிற கண்டிஷனோடு அதிமுக-பாஜக கூட்டணியில் இடம் பெற்றது தேமுதிக. ஆனால் தேமுதிகவுக்கு அந்த பதவி கொடுக்கப்படவில்லை. எனவே, இந்த முறை திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என பலரும் நினைக்கிறார்கள்.
சிலரோ தேமுதிக விஜய் பக்கம் போகவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.
இந்நிலையில்தான் வருகிற 5ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் கருத்தைக் கேட்டு யாருடன் கூட்டணி வைக்கலாம் என பிரேமலதா முடிவு செய்வார் என தெரிகிறது.