கூட்டணி முடிவு: இறுதிகட்ட ஆலோசனையில் விஜயகாந்த்: உச்சகட்ட பரபரப்பில் தேர்தல் களம்

Last Modified புதன், 6 மார்ச் 2019 (11:58 IST)
கூட்டணி தொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 
பெரிய அளவு வாக்கு வங்கி இல்லாத தேமுதிக, ஆரம்பம் முதலே கொஞ்சம் ஓவராய் தான் போய்க்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அதிமுக பாமகவிற்கு 7 சீட் கொடுத்த பின்னர், தங்களுக்கு 7 அல்லது அதற்கு மேலான சீட்டுகளை கொடுத்தால் தான் கூட்டணி என அதிமுகவிடம் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது தேமுதிக.
 
இதையடுத்து இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக, தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கும் தேமுதிக பிடிகொடுக்கவில்லை. இதனால் திமுக தேமுதிகவை கழற்றிவிட்டது.
 
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதனால் தேமுதிகவின் கூட்டணி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
 
இன்று அதிமுக சார்பில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளால் அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில் விஜயகாந்த் புகைப்படம் இல்லை. அவரை தவிர மற்ற அனைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இருக்கின்றது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்று கூறப்பட்டது.
 
அதிமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்குகிறதோ அதனை பெற்றுக்கொண்டால் நல்லது, இல்லையேல் திமுக கழற்றிவிட்டது போல அதிமுகவும் தேமுதிகவை கழற்றிவிட அதிகம் வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கூட்டணி குறித்து எந்நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :