திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 26 ஏப்ரல் 2018 (10:36 IST)

தினகரனின் முதல்வர் ஆசையே எல்லாவற்றுக்கும் காரணம் - போட்டுக் தாக்கும் திவாகரன்

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தனது பேராசையால் அதிமுக என்கிற கட்சியை துண்டு துண்டாக்கி விட்டார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டியளித்துள்ளார்.
 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் திவாகரன் பற்றி தெரிவித்த கருத்துகள், தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.
 
இனிமேல் தினகரனுடன் இணைந்து செயல்பட போவதில்லை. தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அண்ணாவும், திராவிடமும் இல்லாத கட்சியை நாங்கள் ஏற்கமாட்டோம். எனவே, அம்மா அணி என்கிற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். தேவைப்பட்டால் தேர்தலிலில் போட்டியிடுவோம். அதிமுகவின் சுவடே இருக்கக் கூடாது என தினகரன் நினைக்கிறார். கட்சி உறுப்பினர்களை கேட்காமல் அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என திவாகரன் கூறியிருந்தார். 
 
அதே நேரம், சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியில் அண்ணா இல்லை என்ரு திவாகரன் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார். சசிகலா மீது காட்ட  முடியாத கோபத்தை அவர் என் மீது காட்டுகிறார்” என தினகரன் பதிலளித்தார்.


 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த திவாகரன் “அதிமுக தற்போது சந்தித்துள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தினகனின் முதல்வர் ஆசையே காரணம். சசிகலா சிறைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டபோது, அவரிடம் தினகரன் முதல்வர் பதவி கேட்டார். அதன்பின் துணைப் பொதுச்செயலாளர் பதவியாவது கொடுங்கள் என பிச்சை கேட்டார். ஆனால், அதிமுக என்கிற கட்சியை நாசம் செய்துவிட்டார். ஓ.பி.எஸ்-ஐ விரட்டி விட்டனர். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியிடம் அவரின் பாட்சா பலிக்கவில்லை. எனவே, அம்மா முன்னேற்ற கழகம் என தொடங்கி சுற்றிக்கொண்டிருக்கிறார். இவர் ஒழுங்காக இருந்திருந்தால் சிறையில் இருந்தாலும், சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலாவது இருந்திருப்பார். ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் அதிமுக தேய்ந்து விட்டது. இதற்கு தினகரனே காரணம்” என திவாகரன் தெரிவித்தார்.
 
இந்த குற்றச்சாட்டு குறித்து பதில் கூறிய தினகரன் “திவாகரனின் புகார்களுக்கு பதில் கூற விருப்பமில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் எங்களை வெறுத்தாலும் நாங்கள் அவரை நேசிக்கிறோம்” என இறங்கி வந்துள்ளார்.