திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (16:11 IST)

எடப்பாடியை சுற்றி ஸ்லீப்பர் செல்களை வைத்திருக்கும் தினகரன்: ஆபரேஷன் ஆரம்பம்!

எடப்பாடியை சுற்றி ஸ்லீப்பர் செல்களை வைத்திருக்கும் தினகரன்: ஆபரேஷன் ஆரம்பம்!

அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டிவிட்டு ஈபிஎஸ் அணியும் ஓபிஎஸ் அணியும் இணைய நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் சசிகலாவை இன்று பெங்களூர் சிறையில் சந்தித்து பேசினார் டிடிவி தினகரன்.


 
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை மற்றும் போயஸ் கார்டன் வேதா நிலையம் ஜெயலலிதாவின் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற இரண்டு அறிவிப்பையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் அணியும், ஈபிஎஸ் அணியும் ஒன்றாக இணைய உள்ளது.
 
இந்த பரபரப்பான சூழலில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க அவரது பிறந்த நாளான இன்று சிறைக்கு சென்றார் டிடிவி தினகரன். சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனைகளை பெற்ற தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய தினகரன், சசிகலா சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். எனவே அடுத்தடுத்து ஆபரேஷன்கள் நடக்கும். ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது எங்களுக்கு பின்னடைவு இல்லை. இதன் மூலம் சசிகலா மீது எந்த தவறும் இல்லை என்பதை நாங்கள் நிரூபித்து பத்தரை மாத்து தங்கமாக வெளிவருவோம் என கூறினார் தினகரன்.
 
மேலும், எடப்பாடி பழனிச்சாமி அணியில் எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர் செல்கள் மாதிரி பலர் இருக்கின்றனர். மேலூர் பொதுக்கூட்டத்துக்கு வராதவர்கள் தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருவார்கள் என்றார்.