”என் மானத்தை வாங்கிட்டாளே..!” காதலனுடன் ஓடிய மகள்! தாய் தற்கொலை! - விழுப்புரத்தில் சோகம்!
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளியில் படித்து வந்த இளம்பெண் காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதால் தாய் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள காணிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி சக்கரவர்த்தி. இவருக்கு வினிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி 17 வயதில் மகள் ஒருவரும் உள்ளார். அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 9ம் தேதியன்று வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தில் தேடிய பெற்றோர்களும், உறவினர்கள் இறுதியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் மாணவிக்கும், அதே ஊரை சேர்ந்த கோபி என்ற நபருக்கும் நீண்ட காலமாக பழக்கம் இருந்ததும், இருவரும் காதலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை கோபி அழைத்து சென்றுவிட்டதும் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து கோபியையும், மாணவியையும் தேட தொடங்கினர். ஆனால் தனது மகள் இவ்வாறு ஓடி சென்றதால் தாயார் வினிதா சில நாட்களாக மன விரக்தியோடு காணப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென வினிதா நேற்று வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகள் காதலனுடன் ஓடியதால் தாய் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K