வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 12 மே 2024 (12:27 IST)

இலங்கைக்கு கப்பல் பயணம் திடீர் ரத்து.! முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி..!!

Ship
நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை முதல் கப்பல் சேவை தொடங்க இருந்த நிலையில், திடீரென கப்பல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து  கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. செரியாபாணி என்ற பெயரில் கப்பல் இயக்கப்பட்டது.
 
நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் கட்டணமும் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து சேவையை சரியாக இயக்கமுடியாத நிலை உருவானது. குறைவான பயணிகளை மட்டுமே வைத்துக்கொண்டு இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து ஏற்பட்ட புயல் மற்றும் கடும் மழை காரணமாக கப்பல் போக்குரவத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
 
இதனையடுத்து பல கட்ட முயற்சிக்கு பிறகு மீண்டும் இலங்கைக்கு கப்பலை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மே 13ஆம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 
 
சிவகங்கை என்ற பெயர் கொண்ட வேறொரு கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளதாகவும் இதற்கான முன்பதிவும் தொடங்கியது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளன. இந்த கப்பலில்  கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7000 ரூபாயும் வசூல் செய்யப்பட்டது. 
 
இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானதாகும். கோடை விடுமுறையையொட்டி அதிகளவில் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே10 ஆம் தேதி நாகை துறைமுகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரவில்லை.


இதனையடுத்து நாளை தொடங்க இருந்த கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, வரும் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.