வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (11:18 IST)

ஜெயலலிதா சொத்துகளை ஏழைகளுக்காகக் கொடுக்கக் கூடாதா ? – உயர் நீதிமன்றம் கேள்வி !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சில சொத்துகளை ஏழைகளுக்குப் பயன்படும் விதத்தில் ஏன் உபயோகப்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழ்ப்பியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் உள்ள போயஸ் தோட்டம், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துக்களை நிர்வகிக்கத் தனி நிர்வாகியை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டுமென ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களான அவரது அண்ணன் மகன் மற்றும் மகளான தீபக் மற்றும் ஜெ தீபா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இது சம்மந்தமாக நேரில் ஆஜராக அவர்களிருவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இந்த வழக்கின் விசாரணைக்காக தீபக் மற்றும் தீபா ஆகிய இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள் ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்  என கூறிய ஜெயலலிதாவின் சில சொத்துகளை ஏன் ஏழை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் பயன்படுத்தக் கூடாது ? ‘ எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தீபா ‘சில சொத்துகளைப் பயன்படுத்துவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் போயஸ் தோட்டம் உள்ளிட்ட சில சொத்துகளை மட்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இந்த வழக்கை தீர்ப்புக் குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். மேலும் போயஸ் தோட்டத்துக்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கினர்.