ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!
ராம்குமார் பெற்ற கடனை நீங்கள் தந்து விட்டு, அதன் பிறகு நீங்கள் ராம்குமாரிடமிருந்து பின்னர் பெற்றுக் கொள்ளலாமே என்று நீதிபதி கூறிய ஆலோசனைக்கு மறுப்பு தெரிவித்த நடிகர் பிரபு, "ராம்குமார் கடனை என்னால் தர முடியாது" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்யும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடந்தது. அப்போது பிரபு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், "ராம்குமார் கடனை பிரபு மறுத்துவிட்டார்" என தெரிவித்தார்.
"ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே? ஒன்றாகத்தானே ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறீர்கள். நீங்கள் அவருடைய கடனை செலுத்தலாமே?" என நீதிபதி சொன்னதற்கு, பிரபு தரப்பு நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
"ராம்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார். அவருடைய அனைத்து கடன்களையும் என்னால் அடைக்க முடியாது. அவர் பெற்ற மூன்று கோடி கடனுக்காக 150 கோடி ரூபாய் மதிப்புள்ள என்னுடைய வீட்டை முடக்கக் கூடாது. தன்னுடைய வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடனாக பெற்றது இல்லை" என பிரபு தரப்பு வாதம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva