விஜயின் கோட் படத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சி அமைத்துள்ளதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நீங்கள் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளீர்கள். அதனால் இப்போது வெளியாகியுள்ள 'தி கோட்' உங்களின் கடைசி படம் என்று நினைக்கிறேன். திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போதே, திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகி அரசியலில் ஈடுபடுவதாக அறிவி்த்துள்ளீர்கள். கமல்ஹாசனுக்கு இல்லாத துணிச்சல், உறுதி உங்களுக்கு இருப்பது மகிழச்சி அளிக்கிறது. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் The Greatest of All Time அதாவது 'தி கோட்' படம் பார்த்தேன்.
நீங்கள் மட்டுமல்லாது பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா என திரைத்துறையில் சாதித்த பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஒரு காட்சி என் மனதை மிகவும் காயப்படுத்தியது தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அதற்காகவே இந்த கடிதம். இப்படத்தில் செல்போன் திருடனாக நடித்துள்ள யோகிபாபுவிடம், செல்போனை பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் பேசும்போது நான் காந்தி என்று உங்கள் பெயரை கூறும்பொழுது, பதிலுக்கு யோகிபாபு நீ காந்தி என்றால் நான் சுபாஷ் சந்திரபோஸ் என்கிறார். இது இயல்பான கிண்டலாக இருக்கலாம். சுதந்திரம் என்ற லட்சியத்திற்காகவே மகாத்மா காந்தியும், நேதாஜி சுபாஷ் சந்திபோஸும் போராடினார்கள். ஆனால், இருவரின் பாதைகளும் வேறு வேறாக இருந்தன.
அதனால் மகாத்மா காந்தியையும், நேதாஜியையும் நேர் எதிரெதிரானவர் போல காட்டியிருக்கிரீர்கள். திருடன் கதாபாத்திரத்திற்கு கிண்டலுக்காக கூட நேதாஜி பெயரை பயன்படுத்தியிருக்கக் கூடாது. இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வருத்தப்படக்கூடிய காட்சி அமைப்பை உருவாக்கி, மன்னிக்க முடியாத தவறை தெரிந்தோ,தெரியாமலோ செய்து விட்டீர்கள். ஏனெனில் எவ்வித தொலைத்தொடர்பும், நவீன வசதிகளும் இல்லாத காலத்திலேயே கோடிக்கணக்கான இளைஞர்களிடம் சுதந்திரத்தீயை மூட்டியவர் நேதாஜி. அவரை தங்கள் கதாநாயகனாக, லட்சியத் தலைவராக போற்றி வணங்கி வாழ்பவர்கள் கோடிக்கணக்கில் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
நேதாஜி இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் தாமதமாகியிருக்கலாம். அவரின் பெயரைக் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சி அமைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தி கோட் படத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்படாமல் நீங்களும் பட குழுவும் தவிர்த்திருக்கலாம். நீங்கள் நினைத்தால் இப்போது கூட அதை மாற்ற முடியும். அரசியல் களத்திற்கு வந்திருக்கும் நீங்கள் நேதாஜியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒருவேளை நீங்கள் மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய வரலாற்றை தெரிந்து இருக்க வில்லை என்றால், தமிழுக்கும் தமிழருக்கும் தமிழகத்திற்கும் மாவீரர் சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் உள்ள உள்ள அற்புதமான உறவை, விடுதலைஉணர்வை புரிந்திருக்கவில்லை என்றால் , சில அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய தேச விடுதலைக்கான அறவழிப் போராட்டம் காந்தியடிகள் தலைமையில் நடந்தபோது, இந்திய மக்கள் படும் துயரைக் கண்டு இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர் மாவீரர் சுபாஷ் சந்திர போஸ்.
லட்சக்கணக்கான இந்திய மக்கள் உயிரையும் உடைமையும் இழந்தும், தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு,சித்ரவதை செய்யப்படுவதையும், துப்பாக்கியால் சுடப்பட்டும் தூக்கிலிட்டும் படுகொலை செய்யப்படுவதையும் கண்டு வெகுண்டு எழுந்து, இனியும் பொறுப்பதற்கு இல்லை என ஆயுதப் போராட்டத்தை அறிவித்த மாவீரர் சுபாஷ் சந்திர போஸ்.
இவர் தனது தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஜெர்மனியின் ஹிட்லர், ஜப்பான் நாட்டு உதவியுடன், சிங்கப்பூர் மலேசியா பர்மா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் துணையுடன் உலகெங்கும் உள்ள பாரத மக்களின் ஆதரவுடன், ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து நாடுகளின் ஆதரவை ஒருங்கிணைத்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை பலமாக கட்டமைத்தார்.
பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தது நம் தமிழினம், தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் மிகப்பெரிய ஆளுமையுடன் பல்வேறு தொழில்களில் வெற்றிக் கொடி உருவாக்கியிருந்தனர். ஆனால் அனைத்தையும் துறந்து இந்திய தாய் திருநாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கில் சிறை சென்றனர், போரில் வீர மரணம் அடைந்தனர் என்பதை நம் சந்ததியினருக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் தமிழகத்திலிருந்து புறப்பட்டு பெருந்திரளாக திரண்டு வலிமை சேர்த்தனர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழகம் வீரத்தின் விளைநிலம் என்ற உண்மை சொல்லுக்கு இலக்கணமாய் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீரமழக்கமிட்டு வாழ்ந்த மறைந்த ஒழுக்கத்தின் உறைவிடம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமையில் தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்திய தேசத்தின் விடுதலைக்காக சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து விடுதலை வேட்கையுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தனர்.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர்களுள் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் முதன்மையானவர். ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர முக்கிய காரணமாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது. நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில், அதிக வீரர்கள், தளபதிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தனர். குறிப்பாக இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இந்திய தேசிய ராணுவத்தின் புரட்சிதான் மிக முக்கிய காரணமாக இருந்தது என அப்போதைய இங்கிலாந்து பிரதமர் நேதாஜியின் புரட்சியும், இந்திய தேசிய ராணுவத்தின் சுதந்திர வேட்கையின் ஆக்ரோஷமான போர் முறையின் பலமும்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க மிகப்பெரிய காரணமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
இந்திய வீரர்களை வைத்து, ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து போரிட்ட நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், 1946ல் இந்திய பெருங்கடலையே முடக்கி, ஆங்கிலேயர்களின் கப்பற்படையை தோற்கடித்த வீர வரலாறு, உலக சுதந்திரப் போராட்டங்களின் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்திய சுதந்திரத்தின் வீர வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக தமிழகத்தில் வேலூர் சிப்பாய்கலகம் 1806 வெடித்தது. அதன் தொடர்ச்சியாக1857- ல் சிப்பாய் கலகம் மூலம் வட இந்தியாவில் உருவான கிளர்ச்சி முதல் சுதந்திரப் போர் என்று பேசப்பட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான இந்தக் கிளர்ச்சி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையைக் உருவாக்கியது.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட, ஆங்கிலேய ஆட்சியையும் ராணுவத்தையும் நிலைகுலைய செய்த , இந்தியர்களின் ஒவ்வொருவரின் மனதிலும் சுதந்திர வேட்கையை எரிய வைத்த, சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்று இந்தியா முழுவதும் ஒருமித்த குரலை உருவாக்கிய லட்சக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் இன்னுயிரை இழந்து போராடிய சிப்பாய் கலகம் சுதந்திர இந்தியாவின் வேட்கையை அதிகரித்து, ஆயுதமேந்தி போராடி விடுதலையை அடைவதே சிறந்த வழி என்ற உத்வேகத்தை அதிகரித்தது.
அதைத் தொடர்ந்து இந்திய விடுதலைக்கு வித்திட்ட இரண்டாவது இறுதி சுதந்திரப் போர்
என்று பெருமையுடன் வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுகின்ற மாவீரர் சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் நடத்திய விடுதலை போர் ஆங்கிலேயரை எதிர்த்து வெடித்து கிளம்பிய சிப்பாய் கலகத்தின் அதே வேகத்துடன், சுதந்திர வேட்கையை எரிய வைத்து இந்திய விடுதலைக்கு வித்திட்டது. சிப்பாய் கலகத்திற்கு அடுத்து ஆங்கிலேய ஆட்சியாளர்களை நிலைகுலைய வைக்கும் வகையில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து ஆங்கிலேய ஆட்சிக்கு முடிவுரை எழுதியது மாவீரர் சுபாஷ் சந்திர போஸ் என்பதை யாரும் மறைக்க முடியாது. மறக்க முடியாது. மறக்க முடியாது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள ஆட்சியாளர்களை இணைத்து இந்திய விடுதலைக்கு மிகப்பெரிய பங்கை ஆற்றியவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். இந்திய தேசிய ராணுவத்தின் செயல்பாடுகள் இங்கிலாந்து மக்களின் மனநிலையை மாற்றி தேர்தல் அரசியலிலும் மாற்றத்தை உருவாக்கியது. சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நேர்மையான வீரமான அணுகுமுறை இங்கிலாந்து அரசியலையும் ஆட்டிப்படைத்து 1945-இங்கிலாந்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கியது.
அதன் பின்பு தான் இந்தியாவிற்கு மிக வேகமாக சுதந்திரம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. இந்திய சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் நேதாஜி. ஆனால், அவரைப் பற்றி நம்முடைய மாணவர்களும் இளைஞர்களும் நாமும் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் அந்த வீர வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்திய சுதந்திர வரலாற்றில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீர வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டாலும் படிப்படியாக அவருடைய தியாகத்தீயின் கீற்றுகள் தானாக வெளிப்பட்டு இன்றைக்கு இந்தியர்கள் அனைவரும் மனதிலும் அவருடைய வீரமும் பெருமையும் போற்றி வணங்கப்படுகிறது.
நாம் தமிழகத்தின் பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களில் அவருடைய வீரத்தின் பெருமையை, தேசப்பற்றை, ஏக வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும். அவர் கொண்டாடப்பட வேண்டும் என்று பேசி வருகின்ற வேளையில் இதற்கு நேர் மாறாக அவருடைய பெருமையை சிறுமைப்படுத்தும் விதமாக "கோட்" திரைப்படத்தில் ஒரு செல்போன் திருடனுக்கு அவருடைய பெயரைச் சூட்டியது மிகப்பெரிய தவறு. மேலும் அந்த காட்சிகளில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு என்று நகைச்சுவைக்காக பாத்திரங்களின் பெயரை பயன்படுத்தி இருப்பது சுதந்திர போராட்ட வீரர்களை, நாட்டின் தலைவர்களை அவமானப்படுத்தும் செயல். இதற்குக் காரணமான கோட் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் குழு, நடிகர்கள் தின அனைவருமே வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம் என்பதை "கோட்" திரைப்பட குழு அனைவரும் உணர வேண்டும்.
இந்திய சரித்திரத்தில் மட்டுமல்லாமல் உலக சரித்திரத்திலும் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீர வரலாற்றுப் பங்கை, இன்னுயிரை இழந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிந்திய ரத்தம், தலைமுறைகள் பல கடந்தும் விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் எழுச்சியும் வீரமும், தேச விடுதலைக்கான போரில் தேசப்பற்றுடன் இந்திய தாய் திருநாட்டின் வெற்றிக்காக நேதாஜி சுபாஷ் சந்திர நேதாஜி சுபாஷ் அவரின் தலைமை ஏற்று செயல்பட்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தமிழக மக்களுக்கும் உள்ள இதயபூர்வமான உறவை, வீரத்தின் பெருமையை நம்முடைய சந்ததியினருக்கு நாம் கற்றுத்தர வேண்டிய ஆவணப்படுத்தப்பட வேண்டிய காலகட்டத்தில், திரைப்பட காமெடி என்கிற மிகக் குறுகிய வட்டத்தில் அவரின் புகழை கெடுப்பது போன்ற காட்சிகளை நடிகர் விஜய் அவர்களின் "கோட்" படத்தில் உருவாக்கப்பட்டது மன்னிக்க முடியாத தவறு என்பதை நடிகர் விஜய் அவர்களும் படக் குழுவினரும் இயக்குனரும் படத் தயாரிப்பாளரும் உணர வேண்டும்.
அந்தக் காட்சியின் பெயர்களை தாங்களே முன்வந்து மாற்றி அமைத்து முன்மாதிரியான
தலைமை பண்பு கொண்டு தலைவராக விஜய் அவர்கள் இதற்கான முன்னெடுப்பை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் செய்த மாபெரும் தவறுக்கு நீங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். படக்குழு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்கப் போவதில்லை விஜய் அவர்களே! , நடந்த தவறை உடனடியாக திருத்துங்கள். நீங்களும் திருத்திக் கொள்ளுங்கள் என்று மட்டும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய தேசிய போராட்டத்தில் மாபெரும் பங்காற்றி தமிழினத்தின் தலைமை வீரனாக இந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களிடமும், தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களிடம் நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.