ஆளுநரின் செயலால் குடியரசு தினவிழாவில் சர்ச்சை?: தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய குஜராத்!
நாடு முழுவதும் 69-வது குடியரசுத்தின விழா மிகவும் கோலகலாம கொண்டாடப்பட்டது. அதே போல சென்னை மெரினாவிலும் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் குஜராத் பாரம்பரியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை மெரினாவில் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்ட குடியரசுதின விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பலத்த பாதுகாப்புடன் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின்னர் நடந்த கண்கவர் கலைநிகழ்ச்சி விழாவில் குஜராத் பாரம்பரியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழக கலையான கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் பறை இசையும் இந்த விழாவில் இடம்பெற்றது. தமிழக பள்ளி மாணவர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். அதே நேரத்தில் குஜராத் பள்ளி மாணவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் இந்த குஜராத் மாணவர்கள் நேரடியாக கடைசியில் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாணவர்களை குடியரசுதின விழா கலைநிகழ்ச்சியில் பங்குபெற வைப்பதற்கான தேர்வில் எந்தவித அடிப்படை முறைகளும் கடைபிடிக்கப்படவில்லை.
அதேபோல் குஜராத்தில் இருந்து கிராமிய கலைஞர்களும் வந்துள்ளனர். இவர்கள் குஜராத் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக நடனம் ஆடியுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ் பல்கலைக்கழக அனுமதியின் பேரில் நேரடியாக உள்ளே நுழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த நிகழ்வு அனைத்தையும் ஆளுநர் ஏற்பாடு செய்து குடியரசுதின விழாவில் குஜராத் பாரம்பரியத்தை புகுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.