ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் இரவு நேரம் பயணம் செய்ய வேண்டாம் என்றும், இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சேலம் விடுதியில் தங்கி இருந்த இளம் பெண் ஒருவரின் உடல் ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இரவு நேரத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால், சமூக விரோதிகள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எனவே, இரவு 10 மணிக்குப் பிறகு ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், உள்ளூர் மக்கள் சோதனைக்கு பின்னரே உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டும் இரவு நேரத்தில் மலைப்பகுதியில் பயணம் செய்ய முடியும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
Edited by Siva