கால்ல விழுந்து பர்மிஷன் கேட்டோம்!.. அதிகாரிக்கு ஒரு போன் வந்தது!.. தவெக நிர்வாகி ஆதங்கம்!..
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றபோது அசம்பாவிதம் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த பின்னர் விஜய் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டங்களுக்கும் காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இவ்வளவு பேருக்குதான் அனுமதி, அதுவும் QR Code அனுமதியுடன் வரவேண்டும்.. கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த வசதியெல்லாம் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் பல நிபந்தனைகளை காவல்துறை விதித்து அதை ஏற்றுக் கொண்ட பின்னர்தான் தவெகவுக்கு காவல்துறை அனுமதி அளித்து வருகிறது..
ஆனால் விஜய்யோ இது திமுகவின் திட்டமிட்ட சதி.. என்னையும், தவெகவையும் முடக்குவதற்காக திமுக இதை செய்கிறது என தொடர்ந்து சொல்லி வருகிறார். கடந்த 27ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விஜய் தலைமையில் தவெக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெறவிருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் அனுமதி தரவில்லை என சொல்லப்பட்டது..
மேலும், 28ம் தேதியான நேற்று தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர்கள் அனுமதி கேட்ட இடம் மிகவும் குறுகலான பகுதி என்பதால் அதிக மக்கள் கூடிவிட்டால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவே வேறு இடத்தில் அனுமதி கேளுங்கள் எனக்கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துவிட்டது..
இதையடுத்து, சில தேர்தல் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என விஜய் அறிக்கை வெளியிட்டதோடு, தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று தேர்தல் தலைமை ஆணையரை சந்தித்து புகார் மனு கொடுத்தார். ஒருபக்கம், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி வாங்க தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை.. 48 மணி நேரத்திற்கு முன்பாக ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போதும் என தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால் தவெக இதை செய்கிறதா என்பது தெரியவில்லை..
இந்நிலையில்தான் செனனை தவெக வட்ட செயலாளர் அப்புனு ஒரு முக்கிய தகவலை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். மார்ச் 27ம் தேதி நுங்கம்பாக்கத்தில் தவெக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டு ஆயிரம் விளக்கு தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் காத்திருந்தோம். இரவு 7.30 மணிக்குதான் அதிகாரி எங்களை சந்தித்தார்.
அப்போது அங்கிருந்த அவருக்கு ஒரு போன் வந்தது.. உடனே நிகழ்ச்சி நடத்துங்கள் அல்லது நடத்தாமல் போங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து அவர் சென்று விட்டார். அவரின் காலில் விழுந்து அனுமதி கேட்டோம். ஆனால், அவர் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சி நடத்த காவல்துறை என்ஓசி கொடுத்திருந்தது. தேர்தல் அலுவலர்கள் இன்னமும் திமுக விசுவாசியாக செயல்படுகிறார்கள் என அவர் புகார் தெரிவித்திருக்கிறார்.