ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (17:46 IST)

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. மாநகர் போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு

நாளை அதாவது ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பல்லாவரம், தாம்பரம் பேருந்து நிலையங்களிலிருந்து செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தியாகராயநகர் மற்றும் பிராட்வே ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என  மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பணீந்திர ரெட்டி அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் 03.08.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 14.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி 03.08.2024 முதல் 14.08.2024 வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் மா.போ.கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளது.
 
மேலும், காவல்துறையின் வேண்டுகோளின்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மார்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முடிய தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
Edited by Mahendran