தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க தடை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வருமானம் ஏதும் இன்றி திண்டாடி வருகின்றனர். குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் வீட்டு வாடகை கொடுப்பதற்கே வழியில்லாமல் உள்ளனர்
இந்த நிலையில் வீட்டு வாடகையை இரண்டு மாதங்கள் கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என சமீபத்தில் தமிழக அரசு, வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அதையும் மீறி ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூல் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்
வீட்டு வாடகை வசூலிக்க வேண்டாமென வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய தமிழக அரசு மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மே 18ம் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. மேலும் மே 18 வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின் இணைப்பை துண்டிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் தமிழக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்